எலுமிச்சை பழம் சாதம் (லெமன் ரைஸ்)
- Abirami Elumalai
- Jul 28, 2024
- 2 min read
Updated: Aug 20, 2024

நம்ம குழந்தைகளுக்கு சட்டுனு ஒரு மதிய உணவு கட்டிக்குடுக்கணும் நினைக்கும்போது முதல்ல தோண்றது ஒரு கலந்த சாதமா தான் இருக்கும்.
அப்படி ஒரு கலந்த சாதம் தான் இன்னைக்கு நம்ப பாக்க போற எலுமிச்சை பழச் சாதம். இது சமைக்க ரொம்ப ரொம்ப சுலபம். பார்க்க பளிச்சுனு இருக்கறதால குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்கும். ஆன நெறய பேர் என்கிட்ட கேக்குறது என்னனா, "சில நேரங்கள்ல எலுமிச்சை பழச் சாதம் கசப்பாகிடுது. அதை எப்படி தவிர்க்கிறது?"
கவலைப்படாதீங்க, இந்த பதிவுல எனக்கு உதவின மூன்று குறிப்புகளை எழுதி இருக்கேன். மறக்காம அதை செஞ்சு பாருங்க. மேலும், உங்ககிட்ட ஏதேனும் குறிப்பு இருந்தா கிழே இருக்கும் கருத்துக்கள் பகுதில (Comments Section) பகிருங்க.
வாங்க நாம எலுமிச்சம்பழ சாதம் எப்படி சுவையாகவும், கசப்பில்லாமலும் சமைக்கலாமுன்னு பார்போம்.
தேவையான பொருட்கள்

எண் | பொருட்கள் | அளவு |
1 | எலுமிச்சை பழம் | 2 |
2 | வடித்த சாதம் | 1 கிண்ணம் (சுமார் 250 கிராம்) சாதம் |
3 | எண்ணெய் | 3 பெரிய தேக்கரண்டி (3 tablespoon) |
4 | கடுகு | ¼ சிறிய தேக்கரண்டி (¼ teaspoon) |
5 | கடலை பருப்பு | 1 பெரிய தேக்கரண்டி(1 tablespoon) |
6 | உளுத்தம் பருப்பு | 1 பெரிய தேக்கரண்டி (1 tablespoon) |
7 | பச்சை மிளகாய் | 1 (நறுக்கியது) |
8 | காய்ந்த மிளகாய் | 2 |
9 | இஞ்சி | ½ அங்குலம் ( ½ inch) சிறு துண்டுகளாக |
10 | கறிவேப்பிலை | 2 தளிர் |
11 | மஞ்சள் தூள் | ¼ சிறிய தேக்கரண்டி (¼ teaspoon) |
12 | உப்பு | தேவையான அளவு |
13 | பெருங்காயத்தூள் | ¼ சிறிய தேக்கரண்டி ( ¼ teaspoon) |
செய்முறை
வடித்த சாதத்தை ஒரு அகன்ற பாத்திரத்தில் கொட்டி ஆறவையுங்க.
எலுமிச்சை பழத்தை நறுக்கி, கொட்டைகளை நீக்கி, சாறு பிழிந்து ஒரு கிண்ணத்தில் எடுத்துவைத்து கொள்ளுங்க. (குறிப்பு 1: பழத்தை மிகவும் அழுத்தி பிழியக் கூடாது. அழுத்தி பிழிந்தால் சாறு கசப்பாகிடும். அதனால அழுத்தி கடைசித்துளி வரைக்கும் பிழியாதிங்க.) இப்போ எலுமிச்சை பழச் சாற்றில் ½ சிறிய தேக்கரண்டி (½ teaspoon) உப்பை சேர்த்து கலக்கிவையுங்க.
ஒரு சிறிய தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி, குறைந்த தீயில் வைத்து, கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்க. (குறிப்பு 2: குறைந்த தீயில் பருப்புகளை வறுத்தால், பருப்புகள் மொறுமொறுப்பாக சுவையாகவும் இருக்கும்).
அடுத்து மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சேர்த்து உடனேயே அடுப்பை அணைத்து தாளிச்ச பொருட்களை எலுமிச்சை பழச்சாற்றில் சேர்த்துடுங்க. (குறிப்பு 3: பெரும்பாலும் நிறைய பேர் செய்ற தவறு, தாளிக்கும் கடாயில் எலுமிச்சை பழச் சாற்றை சேர்க்குறது தான். அப்படி பண்ணும்போது சில சமயம் சாறு அதிகமாக கொதித்துடும். அதனாலதான் சாதம் கசப்பாகிடும். அதற்கு பதிலாக தாளித்த பொருட்களை கிண்ணத்தில் உள்ள எலுமிச்சை பழச் சாற்றில ஊற்றுங்க. அப்படி சேர்க்கும் போது எலுமிச்சை சாறு அதிக நேரம் கொதிக்கமா போவதை தடுக்கலாம். இப்டி பண்ணா கசப்பு தன்மை வராமலும் சுவையாகவும் இருக்கும்.
கடைசியாக, ஆறிய சாதத்தில் தாளித்த கரைசலை ஊற்றி தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
சுவையான எலுமிச்சை பழம் சாதம் தயார்!
Comments